முன்னுரை:
சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வம்சி
பதிப்பகத்தின் கடையில் ‘இறுதியாத்திரை’ என்னும் நூலைத் தோழி வாங்கிய பொழுது
அங்கிருந்தவரின் பரிந்துரையின் பேரில் இந்நூலை வாங்க நேர்ந்தது. வாங்கி இரண்டு
மாதங்கள் ஆகிய நிலையில், தற்செயலாகக் கண்ணில் பட்ட சுமித்ரா, என் கரம்
பற்றினாள். வாசிக்கத் தொடங்கினேன்.
தமிழ் மொழியின் மீது இயல்பாக எனக்கிருக்கும் பிணைப்பா
அல்லது வெகு நாட்களாய் ஆங்கில நூல்கள் படித்த களைப்பா எனத் தெரியவில்லை.
தொடக்கத்திலேயே இந்நூல் சற்றே மனதிற்கு நெருக்கமான ஒன்றாகத் திகழப் போகிறதென்ற
உள்ளுணர்வு ஏற்பட்டது.
அறிமுகம்:
மாபெரும் எழுத்தாளரும், நாவலாசிரியருமான கல்பட்டா
நாராயணன் அவர்களின் படைப்பான ’இத்ரமாத்ரம்’ என்னும் நூலின் மொழிபெயர்க்கப் பட்ட
வடிவமே ‘சுமித்ரா’. தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பவர் எழுத்தாளர் திருமதி.
கே.வி.ஷைலஜா அவர்கள்.
இவ்விரு எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்பைப் புத்தகத்தின்
முன்னுரையில் காணலாம்.
அட்டைப்படம் மற்றும் உள்படங்கள்:
வடிவமைத்தவர் : ஓவியர் சீனிவாசன்.
கரையும் ஒரு பெண்ணுருவமும் அதைச் சுற்றிச் சிதறிக்
கிடக்கும் சிறு வட்டங்கள் கொண்ட அட்டைப்படம், கதையின் பயணத்தினூடே வாசகர்க்கு
ஏற்படும் உணர்ச்சிப்பெருக்கின் சித்தரிப்பாய் அமைந்திருக்கிறது.
காலத்தின் வேகத்தால் உடலும் உயிருமாய் இந்த உலகத்தை
விட்டுக் கரையும் சுமித்ராவின் பெண்ணுருவம் மரணத்தின் வினைமுற்று. எல்லாம் முடிந்த
பின் சுமித்ரா வடிவ வெறுமை நிரந்தரமாய் இருந்துவிடுகிறது. கரைந்து போகும் புகை தன்
அடையாளமாய்க் கரிய துகள்களை விட்டுச்செல்வது போல், மறைந்துபோன சுமித்ராவின்
நினைவுகள், சிதறிக்கிடக்கும் சிறு வட்டங்களாய்த் தங்கி விடுகின்றன.
முகவுரை:
‘வாழ்க்கையின் வேஷம்’ என்னும் தலைப்பில் இந்நூலுக்குப்
பிரபல எழுத்தாளரான எஸ். இராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் எழில் மிகுந்த முகவுரை,
மறைத்து வைத்த மல்லிகைத் தோட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் மணம். முகவுரை படிக்கும்
பழக்கம் உள்ளவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.
கதையின் சாரம்:
சுமித்ரா இறந்துவிட்டாள். அத்தனை அந்நிய மரணங்களைப்
போலவும் அவளது மரணமும் மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது. துக்க வீட்டின் ஓலமும்,
விரைத்துக் கிடக்கும் பிரேதமும் வாசகர் மனதில் பெரிதாக எந்த ஒரு சலனத்தையும்
ஏற்படுத்தி விடவில்லை.
உயிரற்றுக்கிடக்கும் சுமித்ராவின்பால் வாசகர்க்கு ஏதொரு
உணர்வுமில்லை. மரணத்தின் சந்நதியில், தன் வாழ்வில் சந்தித்த மனிதர்களின்
நினைவுகளாய்ப் பிறப்பெடுக்கும் சுமித்ராவே வாசகர் மனதில் வலம் வருபவள்.
கள்ளங்கபடமற்ற குழந்தைப்பருவம், கதைபேசிச் சிரிக்கும்
தோழமை, பணிச்சியிடம் காட்டும் பரிவு, மாற்றான் பிள்ளையிடம் காட்டும் அன்பு,
முதியோரிடம் கொண்ட மரியாதை, சிறுபிள்ளையின் வெகுளித்தனம், கணவன் மேல் கொண்ட காதல்,
காதல் சிறிதுமற்ற இடத்தில் தலைதூக்கும் காமம், குறைகளனைத்தையும் மறந்து மனிதரை
மனிதராய் மதிக்கும் பெருந்தன்மை எனப் பன்முகம் கொண்டவள் நாம் காணும் சுமித்ரா.
படித்ததில் பிடித்தது:
ü
கதைக்களம் கேரள மாநிலத்தின் வயநாடு என்னும் பகுதியில்
அமைக்கப்பட்டிருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் வயநாட்டின் கல்பட்டா நகரத்தைக்
கண்முன்னே கொண்டுவருகின்றன ஆசிரியரின் எழுத்துகள்.
சுமித்ராவின்
அன்பிற்குப் பாத்திரமான பழங்கலம், வழியெல்லாம் வளர்ந்திருக்கும் தென்னை மரங்கள்,
அஃறிணையான போதிலும் கதையிலே ஒரு அங்கமாய் மாறிவிட்ட காப்பிச் செடிகள் என வாசகர்தம்
மனக்கண்ணில் எழுத்துகளால் வரையப்படுகிறது ஓர் உயிரோவியம்.
கதை
முடிந்த பின்னரும் நெஞ்சில் நீங்காது ஒட்டிக்கொள்கிறது வயநாட்டின் மண்வாசம்.
ü சாதி வேறுபாடு; வேறுபாடின்மை, பெண்கல்வி, ஆண்-பெண் உறவு,
காமத்தின் பெண்பக்கம், பெண்விடுதலை எனச் சமூகக் கண்ணோட்டம் நிறைந்த பல விடயங்களைப்
பலவிதமான பரிமாணங்களில் மிகவும் அமைதியுடனும், நேர்த்தியுடனும் கதையின் போக்கில்
இலைமறை காயாகக் குறிப்பிட்டிருப்பது அருமை.
ü
இந்நூலுடனான பயணத்தின் போது தமிழில் மிகச்சிறந்த
எழுத்தாளரான சுஜாதா அவர்களின் படைப்பான ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ என் நினைவிற்கு
வந்தது. பல்வேறு நிலைகளில் இவ்விரு நூல்கலுக்கிடையில் உள்ள ஒற்றுமையும் அதன்
சிறப்பம்சமும் என்னை வியப்பில் ஆழ்த்தின.
ஸ்ரீரங்கத்து தேவதைகள்.
|
சுமித்ரா.
|
வாழ்க்கைப்
பயணம்
|
மரணத்தின் சந்நதி
|
ஒரு
மனிதனின் வாழ்வில் அவன் சந்திக்கும் மனிதர்கள் அவன் மீது ஏற்படுத்தும் தாக்கம்,
அவன் நினைவுகள் மூலம் கதையாய் வடிவெடுக்கின்றது.
|
ஒரு
பெண் தன் வாழ்நாளில் சந்திக்கும் நபர்கள், சந்தித்த சூழ்நிலைகள், அப்போது ஒரு
பெண்ணாய் அவர்கள் மீது அவள் கொண்ட தாக்கம் இவையனைத்தும் அவள் மரணத்தின் போது
அம்மனிதர்களின் எண்ண அலைகளாகக் கதையாகி இருக்கிறது.
|
கதைக்களம்:
ஸ்ரீரங்கம், தமிழ்நாடு.
|
கதைக்களம்:
வயநாடு, கேரளா.
|
முடிவுரை:
மரணம் என்பது மனிதத்தைத் தாண்டியதோர் மர்மம்.
வேடிக்கையாக, அந்த மர்மமே சில நேரங்களில் நெடுங்காலமாய் மனதை அரித்துக்
கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது.
முதல் பக்கத்தில் இறந்துகிடக்கும் சுமித்ரா, கடைசி
பக்கத்தில் சாகாவரம் பெற்று வாசகர் மனதில் நீங்கா இடம் பெறுகிறாள்.
விமர்சகர் - கோ. ஸ்ரீமதி.
No comments:
Post a Comment